டில்லி
நவராத்திரியைப் பெண்களின் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாடெங்கும் தற்போது நவராத்திரி விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படுவதாகும். இந்த நவராத்திரி திருவிழா என்பது பெண்களை ஒன்றிணைக்கும் விழா ஆகும். அதே நேரத்தில் அரசியலில் இரு துருவங்களாக உள்ள பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் இந்த விழா இணைத்துள்ளது.
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், “தீபாவளி திருநாள் என்பது லட்சுமி தேவியை நமது இல்லத்துக்கு அழைக்கும் விழாவாகும். அதைப் போல் நவராத்திரி விழா என்பது நமது மகள் மற்றும் மருமகள்களைப் போற்றும் விழா ஆகும். இந்த விழாவில் பெண்களை பாரதத்தின் லட்சுமி எனக் கொண்டாட வேண்டும். சமுதாயத்தில் பல மகள்களும் மருமகள்களும் பல சாதனைகளை புரிந்துள்ளனர். அவர்களை நாம் இந்த சமயத்தில் போற்ற வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்த ஒன்பது தினங்களிலும் ஒன்பது விதமாகப் பெண் கடவுள்களை நாம் வணங்கி வருகிறோம். இந்த வழிபாட்டின் மூலம் சமுதாயத்தில் பெண்களுக்கு முக்கியமான இடம் உள்ளதை நாம் உலகுக்கு அறிவிக்கிறோம். தற்போதைய நிலையில் நாம் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நவராத்திரி விழாவின் மூலம் எதிர்மறை சக்திகளை நாம் வெல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்.