டில்லி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடினமாக உழைத்தால் எனது பெயர் இல்லாமலே 2024 தேர்தலில் வெற்றி பெறலாம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இம்முறை பல உறுப்பினர்கள் முதன் முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். பாஜகவின் மக்களவை உறுப்பினர்களுக்காகக் கட்சியின் சார்பில் ஒரு நடைமுறை வகுப்புக்கள் நடந்துள்ளன. இதில் பிரதமர்  மோடி கலந்து கொண்டு தனது அனுபவங்களை உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மட்டைப்பந்து வீரர் கவுதம் கம்பீர், “இந்த கூட்டத்தைப் பார்க்கையில் எனக்கு நான் முதல் முதலாக  மும்பை வாங்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை பந்தயத்தில் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அப்போது அந்த மைதான உடை மாற்றும் அறையில் நடுக்கத்துடன் இருந்த எனக்கு மற்றவர்கள் தைரியம் அளித்தனர். இப்போது அரசியல் உலகிலும் எனக்கு ஆலோசனை கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது உரையில், “இப்போது நீங்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள். இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கும் அதிகமாக உங்களுக்கு மக்கள் பனி புரிய நேரம் உள்ளது. எனவே  உங்கள் தொகுதிக்குத் தேவையான பணிகளைச் செய்யுங்கள். நீங்கள் தொகுதிக்கு உங்கள் கடின உழைப்பின் மூலம் நன்மை செய்தால் வரும் 2024 ஆம் வருடத் தேர்தலில் என் பெயரைச் சொல்லாமல் வெற்றி பெறலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.