சென்னை: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டணமில்லா நவீன வசதிகளுடன் கூடிய தூய்மையான கழிவறை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக ரூ.63 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியுள்ளது.
தற்போது சென்னையில் உள்ள பெரும்பாலான கட்டணமில்லா கழிவறைகளில் ஆளுங்கட்சியினர் கட்டணங்கள் வசூலித்து வரும் நிலையில், மாநகராட்சி மீண்டும் கட்டணமில்லா நவீன கழிவறை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது, மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், சென்னை சிங்காரச்சென்னையாக மாற்றப்படும் என அறிவித்தார். அதன்படி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை முழுவதும் அங்காங்கே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மெட்ரோ ரயில் திட்டங்களும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நகரம் முழுவதும் நன்கு பராமரிக்கப்பட்ட மற்றும் தரமான பொதுக் கழிப்பறைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்து தல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துதல் மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து ஊக்குவித்தல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கல்வியில் சென்னையின் கீழ், சென்னைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், படிப்பதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கற்றல் மையங்களை ஏற்படுத்துதல், நவீன நூலகங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு கட்டணமில்லா நவீன கழிவறை அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகரத்தில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற முறையிலும், பொதுக்கழிப்பறை என்றாலே அசுத்தம், துர்நாற்றம் போன்ற எண்ணங்களை மக்களிடம் தோற்றுவித்துள்ள நிலையில், அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களிடம் எழுந்துள்ள இதுபோன்ற எண்ணங்களை மாற்றும் நோக்கில், முதல்கட்டமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 9 பொது கழிப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது. கழிவறைகளின் வெளி சுற்றில் ஓவியங்கள், பெண்களுக்கான சானிடரி நாப்கின் வசதிகள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக சாய்தள பாதை, தடையில்லா தண்ணீர் விநியோகம் போன்ற வசதிகள் செய்து மேம்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக, சென்னை முழுவதும் ரூ. 63 கோடி செலவில் 500 கழிவறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ள இ – டாய்லெட்டுகளையும் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் மேம்படுத்தப்பட்ட கழிவறைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 50 கழிப்பறைகளை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அடையாறு பகுதியில் ‘லூகஃபே’ என்னும் அதிநவீன கழிப்பறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.