சென்னை: 
8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நாசர்,  6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றார்.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தேவைக்காக, 88 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 குளிர்காப்பு வாகனங்கள் மற்றும் 3 குளிர்சாதன வசதிகொண்ட கூடுந்துகள் வழங்கப்படும் என்றும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.