சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாகவும், குறிப்பாக 5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வழக்கமாக டிசம்பருடன் பருவமழை ஓய்வு பெறும். ஆனால், இந்த ஆண்டு, பொங்கல் வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவ்வப்போது மழை பெய்துவருகிறது. கடந்த 10 நாட்களாகமழை பெய்யாத நிலையில், நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (11.01-2025) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை, 12-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்,  13, 14-01-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாரி வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதலி 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.