சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கூடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் பலவீனமாக கரையை கடந்தைத் த்தொடர்ந்து தமிழ்நாட்டில் மழை வெகுவாக குறைந்து, குளிர்காற்று வீசத்தொடங்கியது. இருந்தாலும் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சம் போதுமான அளவு காணப்படாமல் குளிர்ச்சி நிலையே கடந்த ஒருவாரமாக நீடித்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. இதனால், இழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், வெதர்மேன் எனப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில், தூத்துக்குடி முதல் டெல்டா பகுதி வழியாக சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மாஞ்சோலையை மீண்டும் கவனியுங்கள். கிழக்குக் காற்றுடன் கூடிய ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மட்டுமே மாஞ்சோலையில் மழை பொழிவதற்கு போதுமானது.
சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக திடீர் மழை பெய்யக்கூடும். பெரிய அளவில் மழை இருக்காது. இதமான மழையாக இருக்கும்.
இந்த இரண்டு நாட்களும் இரவு நேர வெப்பநிலை சற்று அதிகரிக்கும், அதன் பிறகு மீண்டும் குளிர் நாட்கள் திரும்பும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]