சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹசான்,  அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளதால், விரைவில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதிமுக, பாஜக, பாமக இணைந்து கூட்டணியை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில்,  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு   நிலவி வருகிறது. ஏற்கனவே ராகுல் காந்தியை சந்தித்த கமலஹாசன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க பெருந்தலைகள் விருப்பம் காட்டாத நிலையில், தனித்து களமிறங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்து கமல், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றவர், . மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாங்கள் ஏற்கனவே கிராம சபை கூட்டங்கள் போன்ற வற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம் என்றவர்,  எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன என்று மறைமுகமாக திமுகவின் கிராம சபா கூட்டங்களை பற்றி விமர்சித்தார்.

எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசி வருகிறார்கள்…ஆனால் சில கட்சிகளை எங்களால்   ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றவர்,  மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், எங்கள் தோளில் சவாரி செய்ய எந்தவொரு கட்சயையும்  அனுமதிக்க மாட்டோம் என்றார்,.

தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம் என்றவர்,  காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்றும்,  மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம் என்றும் கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறது என்றவர்,  நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது என்றும்,  எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம் என்றும், நான் தேர்தலில் போட்டியிடுவது என்பது, சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் போட்டியிடுவேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.