நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், முஸ்லீம் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(ஐயூஎம்எல்) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி(மமக) ஆகிய இரண்டும் திமுக கூட்டணியில் இடம்பெற்றன.

இதில், ஐயூஎம்எல் கட்சி 3 தொகுதிகளையும், மமக 2 தொகுதிகளையும் திமுகவிடமிருந்து பெற்றது. இவற்றுள், ஐயூஎம்எல் கட்சி, தங்களின் சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிட, திமுகவிடம் சம்மதம் வாங்கியது. ஆனால், மமக, தான் வாங்கிய இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்தது.

ஐயூஎம்எல் கட்சிக்கு, வாணியம்பாடி, சிதம்பரம் மற்றும் கடையநல்லூர் தொகுதிகளும், மமகவுக்கு பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகளின்படி, ஐயூஎம்எல், தான் போட்டியிட்ட மூன்றிலும் தோற்றுப்போனது. ஆனால், மமக, தான் போட்டியிட்ட இரண்டிலும் வென்றுவிட்டது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில், தனிச்சின்னத்தில் போட்டியிட்ட ஐயூஎம்எல், கடையநல்லூரில் மட்டும் வென்றிருந்தது. மேலும், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது.

அந்த தைரியத்தில், இந்த தேர்தலிலும் களமிறங்கிய ஐயூஎம்எல், மூன்றிலும், இரட்டை இலையிடம் தோற்றுப்போனது. ஆனால், மமக சட்டமன்றத்திற்குள், திமுகவின் பேனரில் நுழைந்துவிட்டது.

இந்த சட்டமன்றத்தில், ஒரேயொரு முஸ்லீம் கட்சி, திமுகவின் பேனரில்தான் இடம்பெற்றுள்ளதே தவிர, தனியான அடையாளத்தில் எந்த முஸ்லீம் கட்சியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.