ஏற்காடு:
தனது கட்சி எம்.எல்.ஏக்கள் குழுக்களாக தன்னை வந்து சந்திப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் குழுக்களாக சந்திதித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக… முக்கியமாக அமைச்சர் பதவி வேண்டி.. இந்த சந்திப்புகளை எம்.எல்.ஏக்கள் நடத்துவதாக பேசப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள்., தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காகவே சந்தித்ததாக கூறி வந்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏக்களின் நிர்ப்பந்தத்தை அடுத்து தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட இருப்பதாகவும் முதல் கட்டமாக இரு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று ஏற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை மறுத்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது:
“தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காகவே எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்தனர். அமைச்சர் பதவி கோரி யாரும் வலியுறுத்தவில்லை. தற்போதைக்கு அமைச்சரவையை விரிவாக்கும் திட்டமும் இல்லை” என்றார்.
மேலும், “அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது” என்றும் தெரிவித்தார்.