சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட்கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இன்றைய விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு டெண்டர் எடுப்பதில் தவறில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ரங்கநாதன், சென்னை கிரீம்ஸ் சாலையில் காவல்துறை குடியிருப்புகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது, அரசு டெண்டர் எடுக்கும் பணிகளில், அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசு டெண்டரை சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அமைச்சர்களுடைய உறவினர்கள் சட்டத்திற்குட்பட்டு எடுக்கலாம் எனவும் கூறினார்.