எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி அகில இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து வலைத்தளங்களில் பரவும் கருத்துக்கள் mla for sale என்ற ஹேஷ்டாக் உடன் ட்ரெண்டாகி வருகிறது.*
அந்த வீடியோவில் பேசும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், புறப்படும்போது 2 கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு அது 4 கோடி ஆகி இறுதியில் கூவத்தூர் விடுதியை அடைந்த போது 6 கோடி ஆகிவிட்டதாக கூறினார். “என்னடா இது கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன்.. பின்னர் பணமாக கொடுக்க முடியாது.
அதனால் தங்கக்கட்டிகளாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டேன்” என்றும் அதிர்ச்சி தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் சரவணன். தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு ஆளுக்கு பத்து கோடி கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் சரவணன் அந்த வீடியாவில் வருத்தப்பட்டார்.*
சரவணன் எம்எல்ஏ கூவத்தூர் விடுதியிலிருந்து தப்பிவந்து ஓ.பி.எஸ். அணியில் இணைந்தவர் என்பதால் இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள்தான் ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் டைம்லைன்களை நிறைத்து வருகின்றன. தமிழகம் பற்றிய செய்தி ஒன்று அகில இந்திய அளவில் ட்ரெண்டானால் பெருமைப்படலாம்.
ஆனால் இந்த ட்ரெண்டில் நமது மானம் போகிறது என்று பெரும்பாலானவர்கள் ட்விட் செய்துள்ளனர். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிறது ஒரு ட்வீட். மற்றொருவர் நமது எம்எல்ஏக்களின் விலை என்னவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர் வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்கிறார். அரசியல் சூதாட்டம்… வெட்கம்…. வெட்கம்… என இப்படி நெட்டிசன்கள் விதவிதமாகக் கொந்தளித்து வருகின்றனர்.