தேனி:

வைகை அணையில் பரப்புவதற்கு 60 தெர்மோகோல்கள் மட்டுமே வாங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் பரப்பும் திட்டத்தை கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடங்கிய சிறிது நேரத்திலேயே தெர்மோகோல்கள் அனைத்தும் அலையில் அடித்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்துவிட்டன.

அதோடு பல தெர்மோகோல்கள் காற்றில் பறந்து சென்றதையும் காண முடிந்தது. இந்த செயல் பலத்த கண்டனத்திற்கும், சமூக வளை தளங்களில் நகைச்சுவை அம்சமுமாக மாறியது. இந்த திட்டம் குறித்து மதுரை கீழ வெளி வீதியை சேர்ந்த ஹக்கிம் என்பவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு வைகை அணையின் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்புச் செல்வம் அளித்துள்ள பதில் விபரம்:

1. வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் விடும் திட்டத்தின் மதிப்பு எவ்வளவு?

பதில்: திட்டம் எதுவும் தயார் செய்யப்படவில்லை.

2. மொத்தம் எத்தனை எண்ணிக்கையில் தெர்மோகோல் வாங்கப்பட்டது?

பதில்: 60 எண்ணிக்கை

3. இந்த திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலர் பெயர் மற்றும் பதவி என்ன?

பதில்: இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலர் யாரும் இல்லை.

4. இதற்கு முன் வேறு அணைகளில் இந்த திட்டம் செயல்படுத்தியிருந்தால் அதன் விபரம்?

பதில்: இவ்வலுவலக கோப்பில் இது சம்மந்தமான விபரம் எதுவும் இல்லை.

5. வைகை அணையில் இந்த திட்டம் நிறைவேற்றிய போது அரசு சார்பில் கலந்துகொண்டவர்கள் யார் யார்?

பதில்: மாண்புமிகு அமைச்சர், சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்.

 

இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.