சென்னை,

தொடரும் மழை காரணமாக திமுக செயல்தலைவரின் எழுச்சி பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி வரும் 7ந்தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சுற்றுப்பயணத்தை தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வடமேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தனது பயணத்தை ஒத்தி வைப்பதாகவும், , மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை காக்க தொண்டர்கள் களமிறங்க வேண்டும் எனவும் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,  வடகிழக்கு பருவமழை கடுமையாகி சென்னை மற்றும் புறநகர் மக்களும், கடலோர மக்களும் அவதியடைந்துள்ளனர். ஒருநாள் மழையையே சமாளிக்க முடியாத வகையில் தமிழக அரசின் நிர்வாகம் செயலிழந்து, மக்கள் துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமது எழுச்சிப்பயணம் ஒத்திவைக்கப்படுகிறது.  ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக பல இடங்களில் வெள்ளமென மழைநீர் தேங்கி நிற்பதையும், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதையும் காணும்போது, இந்த அரசை இனியும் நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதுள்ளது. எனவே, திமுக தொண்டர்கள் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.