சென்னை,
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, முதல்வர் பழனிசாமி சந்திக்க இருப்பது வரவேற்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் முதலமைச்சர் பழனிச்சாமி , கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க இருப்பதாக எடுத்துள்ள முடிவுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், அதே நேரத்தில் இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றார்.
காவிரி பிரச்சினை குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாய சங்க தலைவர்களையும் தலைநகர் டில்லிக்கு தமிழக அரசு அழைத்துச் சென்று பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும், மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தடியடி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், பேருந்து கட்டண விவகாரத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவித்து, வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பேருந்து கட்டணம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வரும் 6ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உதயநிதியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி நழுவினார்.