சென்னை,

வெளிநாடு சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். கொளத்தூர் தொகுதியில் முதல்வரும், துணைமுதல்வரும் சென்று நிவாரணப்பணிகள் குறித்து ஆய்வு செய்தும், நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், ஸ்டாலின் இன்று மீண்டும் தனது தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு செல்கிறார்.

இன்று பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருக்கும் நிலையில், வெளிநாடு சென்றிருந்த ஸ்டாலின் இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்த வேளையில், அவர் வெளிநாடு  சென்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு சென்று முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர்  ஓபிஎஸ் சென்று,  மழைச் சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தி நிவாரண உதவிகளை வழங்கினர்.

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்குள் பெரும்பாலும் அமைச்சர்களே செல்வதில்லை. ஆனால், முதல் முறையாக முதல்வரும் துணை முதல்வரும் அங்கு விசிட் அடித்து நிவாரணம் வழங்கியும்,  இரட்டை ஏரி சந்திப்பு அருகில் வீனஸ் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியை முடுக்கி விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னை திரும்பி உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் பகுதிக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த வாரம் கொளத்தூர் தொகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்து வெள்ள நீரை வெளியேற்ற அறிவுறுத்திய ஸ்டாலின்,  சார்ஜாவில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்க அந்த நாட்டு அரசு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் சார்ஜா சென்று அந்த விழாவில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து  கொளத்தூர் தொகுதிக்கு இன்று மீண்டும்  சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிகிறார்.