நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்ட செய்தியை டெல்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான் என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நெடுவாசல் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றேன். அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை தெரிவித்து விட்டு, போராட்டக் களத்தின் மத்தியில் நின்று உரையாற்றிய நான், “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்ட செய்தியை டெல்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு இத்திட்டத்தை கைவிடுமாறு கடிதம் எழுதினேன்” என்பதை எடுத்துரைத்து, “விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் துணை நிற்கும்” என்று தெரிவித்தேன்.
அந்த மக்களின் உணர்வு மிக்க போராட்டம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பிறகு என்னை சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம், ” விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்த திட்டம் அமைந்திருக்கிறது என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். ஆகவே தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்ற கோரிக்கை விடுத்தேன். தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில் எப்படி ஜனநாயக ரீதியாக போராட முடியும் என்பதை நெடுவாசல் போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள்” – இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.