சென்னை:

நீட் தேர்வை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை காரணமாகவும், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க  அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்,  திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  தேமுதிக, மதிமுக, தமாகா கட்சிகள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் அனிதா மரணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில்,   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

இந்தக் கூட்டத்தில், அண்மையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய வகையில் முதல் தீர்மானம் நிறை வேற்றபட்டது.

இரண்டாவது தீர்மானமாக மாணவி அனிதா அவர்களின் உயிர்பலிக்கு காரணமாக அமைந்த மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கின்ற வகையிலும், அதற்கு இரு அரசுகளும் பொறுப்பேற்க வேண்டுமென்ற வகை யில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

3வது தீர்மானமாக, மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து, செப்டம்பர் 8 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை, திருச்சி மாநகரத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்ற வகையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தை, முதற்கட்டமாக நடத்த இருக்கிறோம்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறோம். இதனை அனைத்துக் கட்சித் தலைவர்களின் சார்பாக உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்,  மாணவி அனிதாவின் மரணத்தை திசைத்திருப்பும் வேலையில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும், டாக்டர் தமிழிசை அவர்களும் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.