சென்னை

மிழ் மொழியை புதிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்தது.  இந்த 484 பக்கங்கள் கொண்ட வரைவின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.  கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.   தற்போது நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணக்க இந்த புதிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கொள்கை அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் , மலையாளம், தெலுங்கு, கொங்கணி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருக்கும் மும்மொழி கொள்கை உள்ளிட்டவற்றுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.  இந்நிலையில் இந்த மொழி பெயர்ப்பில் தமிழ் மொழி இடம் பெறாதது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.   இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து  டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பைக் கூட தமிழில் வெளியிடாமல் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. அரசு. கடும் கண்டனங்கள். மொழி உணர்வு – மாணவர் எதிர்காலத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது. கொள்கையின் மொழி பெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும், பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது

மத்திய பா.ஜ.க அரசு. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உருது உள்ளிட்ட மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க உறுதியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்”என மு க ஸ்டாலின்  கண்டனம் எழுப்பி உள்ளார்.