இன்று மத்திய அரசு தக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

stalin

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பொறுப்பு நிதி அமைச்சராக உள்ள பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தனி நபருக்குக்கான வருமான வரி குறைப்பு, இலவச எரிவாயு இணைப்பு, நாட்டின் நிதி இருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றன. குறிப்பாக, விவசாயிகள் நலன் கருதியும், நடுத்தர குடும்பத்தினரின் நன்மைக்காவும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது பட்ஜெட் இல்லை, தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட் மக்களை ஆசை வார்த்தை கூறி, திசைதிருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள், உள்நோக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. “இரு ஹெக்டேர் நிலத்திற்குக் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் நிதியுதவி”, “ஐந்து லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை” என்ற இரட்டை அறிவிப்புகள் வெளிப்படையாக வரவேற்புக்குரியவை போல் இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நேரம் – அறிவிக்கப்பட்ட தொகை – அதை வழங்கும் நேரம் எல்லாம் விலகிச் சென்று விட்டது. இது போன்ற ஆசை வார்த்தைகளால் சிறுபான்மையினரை கவர்ந்திழுத்து மக்களவை தேர்தலில் கரையேற பாஜக பயணிப்பது புரிகிறது.

கலால் வரியாக ரூ.18 லட்சம் கோடி வசூலித்து, பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பொருளாதாரப் புள்ளி விபரங்களிலும் கைவைக்கும் பா.ஜ.க. அரசின் புரட்டு வேலை ஏற்கனவே அம்பலமாகி விட்டது. சுருக்கமாகச் சொன்னால் இது பட்ஜெட் அல்ல! பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை! மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்ததைப் போல இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த அறிக்கை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு “கொடுங்கனவாக”வே இருக்கப் போகிறது என்பதே உண்மை! என ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.