சென்னை:
அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பமாக ரஜினிக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியலில் களமிறங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். வரும் 31ம் தேதி கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போதும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம், திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘தலைவரின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்’ என இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டிருக்கிறார். ரஜினியின் இந்த அறிவிப்பு தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு பல தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மு.க அழகிரியும் தொலைபேசி வாயிலாக ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். கட்சியுடன் சேர்த்து உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு ரஜினியிடம் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்ட அழகிரி, தேர்தலில் எனது பங்கு இருக்கும் என சூசகமாக தெரிவித்திருந்தார். இதன் மூலமாக மு.க அழகிரி, பாஜக அல்லது ரஜினியின் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மு.க அழகிரி வேறு கட்சியுடன் சேர்ந்து விட்டால் திமுகவிற்கு தென்மாவட்டங்களில் சவால் நீடிக்கும். இவ்வாறு இருக்கும் சூழலில் மு.க அழகிரி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.