ஸ்வால்

மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே தனது தொகுதியில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு ரூ1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலம் மொத்தம் 21,087 சதுர கிமீ பரப்பளவு உள்ளதாகும்.   கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள் தொகை 10,91,014 ஆகும்.  அதாவது ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர்.  மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பை கொண்டுள்ளது.  தேசிய சராசரியானது சதுர கிமீக்கு 382 ஆகும்.

இதையொட்டி மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரிக்கப் பல அறிவிப்புக்களை அங்குள்ள அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே என்பவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர், “எனத் ஜஸ்வால் கிழக்கு பகுதியில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிக்குள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்று தற்போது உயிருடன் உள்ள ஆண் அல்லது  பெண் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.  மேலும் அந்த நபருக்குச் சான்றிதழும் கோப்பையும் வழங்கப்படும்.    இந்த செலவை எனது மகன் நடத்தும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் ஏற்கும்.

மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது.  இதனால் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அடிய தேவையான அளவை விட மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ளது.  இது ஒரு தீவிர பிரச்சினை ஆகும்.  சிறிய சமூகங்களான மிசோரம் பகுதி பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கு இது மிகவும் தடையாக உள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் மிசோரமின் அண்டை மாநிலமான அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளவர்களை ஊக்குவிக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.