சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் 3ல் பலகட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் இராயப்பேட்டை நிலையத்திலிருந்து ஆர்.கே. சாலை நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை லார்சன் & டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் பாலம் மற்றும் இராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரியக் கட்டிடம் ஆகியவற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘பவானி’ ஈடுபடுத்தப்பட்டது.

910 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப் பணியை வெற்றிகரமாக முடித்து ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது.

இதே வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தற்போது மந்தைவெளி பகுதியை வந்தடைந்துள்ளது.

இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பூந்தமல்லி – லைட் ஹவுஸ் இடையிலான வழித்தடம் நாளில் போரூர் முதல் கோடம்பாக்கம் வரையிலான பணிகளை துரிதப்படுத்த மூன்றாவதாக ஒரு ஒப்பந்ததாரர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ள பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.