பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு  சிம்மசொப்பனமாக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். மோடி அரசின் அநாகரிகமான அரசியல் அவலங்களை  கடுமையாக எதிர்த்து வருவதுடன், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசை தூக்கி எறியும் வகையில், அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார்.

சமீப ஆண்டுகளில் நடைபெற்ற பல மாநில சட்டமன்ற தேர்தல்களில், பாரதியஜனதா கட்சியை  மண்ணை கவ்வ வைத்ததில் அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல, வவ இருக்கும் பாராளுமன்றத்தேர்தலில், மோடி தலைமையிலான பாஜக அரசை புறமுதுகிட்டு ஓடச்செய்வதற்கான ஆட்டத்தை தொடங்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

`பி.கே’ என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் பூர்வீகம் பீகார் மாநிலம். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார். அந்தத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்தில் இவர் பங்கெடுக்க ஆரம்பித்தார். ஆப்பிரிக்கா நாடுகளில் ஐ.நா பல சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்திவந்தது. அந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் நபர்களில் கிஷோரும் ஒருவராகச் செயல்பட்டுவந்தார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிக்கு, குறிப்பாக மோடியின் வெற்றிக்கு பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினர். தேர்தல் வெற்றிக்கு பிறகு, பாஜகவில் எழுந்த உள்கட்சி பிரச்சினைகளால்  ஓரங்கட்டப்பட்டார் கிஷோர்.  அப்போது, பி.ஜே.பி-யின் பொருளாளராக இருந்த பியூஷ் கோயல், பிரசாந்த் கிஷோர் இடையே நேரடி கருத்து மோதல்  ஏற்பட்டதாக கூறப்பட்டது.  இதையடுத்து, அங்கிருந்து வெளியே கிஷோர், `பி.ஜே.பி-யை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோள்’ என்று கூறி, அதற்கான பணியை முன்னெடுத்து வருகிறார்.  அதற்காகவே கடந்த 2015ம் ஆண்டு ஐபேக் என்ற நிறுவனத்தை தொடங்கி செயலாற்றி வருகிறார்.

2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து,  நிதிஷ்குமார் தனியாக களத்தில் இறங்கியபோது, அவருக்கு  ஆதரவாகத் தேர்தல் பணியாற்றத் தொடங்கினார்  கிஷோர். அவரின் திட்டம் அங்கு நிதிஷ்குமார் கட்சியை வெற்றி பெற வைத்தது. இதையடுத்து, பிரசாந்த் கிஷோருக்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் குஜராத், உ.பி. மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிரசாந்த் கிஷோர் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியவில்லை. ஆனால், அதன்பிறகு, ஆந்திரா, டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தக்க வைத்ததுடன், 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழகம், மேற்குவங்க மாநில வெற்றியை தக்கவைத்து, தனது சாணக்கியத்தனத்தை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளார்.

இந்த நிலையில்தான், பிரசாந்த் கிஷோர் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இந்த தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் தற்போதே திட்டங்களை வகுக்கத் தொடங்கி உள்ளன. 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து வரும் மக்கள் விரோத  பாரதியஜனதா கட்சியை, வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தூக்கி வீசுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளன. இதில் பல மாநிலக்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதுடன், அவைகளுடன் தேசிய கட்சிகளும் கைகோர்த்துள்ளன. இதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதுடன், அதற்கு உறுதுணையாக, அரசியல் சாணக்கியன் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பிரசாந்த் கிஷோரோ, திமுக, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்த சூட்டோடு சூடாக,  ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து விலகப்போவதாக  அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரஷாந்த் கிஷோர், ‘தனக்கு இடைவேளை தேவை. அதனால் இந்தப் பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம் என்று இருக்கிறேன். என்னால் இந்த வேலையை இனிமேல் செய்யமுடியாது” எனத்தெரிவித்திருந்தார்.

இருந்தாலும், அவரது  சமீபகால நடவடிக்கைகள் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது. அவரை, பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங் தனது  முதன்மை ஆலோசகராக  நியமித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து பவாருடனான சந்திப்பு கிஷோர்  தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணம் செய்து, பாஜக அரசை வீழ்த்துவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றும் வெறியில்,  கூட்டணி கட்சியான சிவசேனாவை சீண்டிய பாஜக, ஆட்சி அமைக்காமல் போனது அனைவரும் அறிந்ததே. தற்போது அங்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது, அங்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா தலைவர்களிடையே நல்லபுரிதல் இருப்பதால், அவர்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைணந்து உள்ளனர்.

ஏற்கனவே  சிவசேனா தலைவர் மறைந்த பால்தாக்கரேவுக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே பலமான நட்பு நிலவி வந்தது. அதனால், அவர் இருக்கும்வரை, தங்களது கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதை நிலை தற்போது மீண்டும் உருவாகி உள்ளது. மும்பையில் 12ந்தேதி அன்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்த பிரசாந்த் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டது.  அதை உறுதிப்படுத்தும் நோக்கில்தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முதன்முறையாக அமைந்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலக் கோரிக்கைகள் குறித்து சந்தித்தார். அதுபோல, தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவை  முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும், மாநில பாஜக தலைவருமான ஃபட்னாவிஸ் சந்தித்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி சரத் பவார் கட்சியில் தன்னை இனைத்துக் கொண்டார். இந்த சூழலில்தான் பிரசாந்த் கிஷோர் சரத்பவார் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது அங்கு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்களான சிஏஏ, என்சிபி, விவசாய சட்டங்கள் உள்பட பல்வேறு சட்டங்களுக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இது,  2024 பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.  தற்போது பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான கருத்தே மக்களிடையே நிலவி வருகிறது.

குறிப்பாக தென்மாநில மக்களிடையே பாஜக விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.  தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி டெல்லி, பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், ஜம்மு, காஷ்மீர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர், அசாம், நாகலாந்து, ஒடிசா, மேற்குவங்கம்  உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான மனநிலையே மக்களிடையே நிலவி வருகிறது. அதுவே நடைபெற்று முடிந்த தேர்தல்களில் எதிரொலித்துள்ளது.

இதுபோன்ற சூழலை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், அரசியலில் அதிகாரம் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாகவே கருதப்டுகிறது.  அதற்கான திட்டமே ‘மிஷன்2024’,. நாடு முழுவதும உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக  பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசை தூக்கி வீச, அரசியல் சாணக்கியரின் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்பது போகப்போகத் தெரிய வரும்… 

ஆட்டம் ஆரம்பம்…