விழுப்புரம்: கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வரும் 18ந்தேதி கூத்தாண்டவர் திருவிழா, மிஸ்கூவாகம் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள  கூத்தாண்டவர்கோவில் திருவிழாவையொட்டி மிஸ்கூவாகம் அழகிபோட்டி ஆண்டுதோறும் நடைபெறுவதும் வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக கூத்ததாண்டவர் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் 18-ந்தேதி அன்று மிஸ் கூவாகம் அழகி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டமாக ஏப்ரல் 5ந்தேதி முதல்   கூத்தாண்டவர் கோவிவில்  18 நாள் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  2-ம் நாள் விழாவான நேற்று பந்தலடியில் முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 3வது நாள் விழாவான இன்று (7-ந்தேதி) சாந்தனு சரிதம் மற்றும் சாமி புறப்பாடு நடக்கிறது. 4வது நாளான  நாளை (8-ந் தேதி) பீஷ்மர் பிறப்பு நிகழ்ச்சியும், இரவு சாமி புறப்பாடும் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 18-ந் தேதி மிஸ் கூவாகம் அழகிபோட்டி நடைபெறுகிறது.

அடுத்த நாளான ஏப்ரல் 19ந்தேதி திருநங்கைகள் தாலி கட்டுதல். சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோவிலுக்கு வரும் திருநங்கைகள், சாமி கும்பிட்டு விட்டு, கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். தாலி கட்டியவுடன் அன்று இரவு முழுவதும் திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.

அடுத்த நாளான ஏப்ரல் 20-ந் தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான திருநங்ககைகள் குவிவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுவதால், கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.