சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால், அடுத்த 10 நாட்கள் மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும், ரெம்டெசிவிர் குறித்து தனியார் மருத்துவமனைகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும்  தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வீறுகொண்டு பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சசத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ‘ இந்த நிலையில், சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக அமைக்கப்பட்ட 250 படுக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 60 படுக்கை வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போர்க்கால அடிப்படையில் 12,852 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் 576 படுக்கைகள் உருவாக்கப்பட்டன. நாளை 3,076 படுக்கைகளும், வருகிற 7ஆம் தேதிக்குள் 8,225 படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்குள் 500 படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.

கடந்த வாரம் 354 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 900 முதுகலை பட்டம் பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளோம்.

மினி கிளினிக்கில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட மருத்துவர்களை கோவிட் கேர் சென்டருக்கு பணியாற்ற மாற்றியுள்ளோம்.

கோவை போன்ற இடங்களில் செவிலியர்கள், மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். அங்கேயும் அவர்களைப் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேவையை விட மூன்று மடங்கு ஆக்சிஜன் சேமிப்பில் உள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். வெளியே அதிகம் செல்ல வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்து மேஜிக் கிடையாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அந்த மருந்து தேவைப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிரைத் தேவையில்லாமல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் இல்லையென்றால் உயிர் போய்விடும் என்று தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.