டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதாக இடைநீக்கம் செய்யப் பட்ட கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனோ கட்சிகளைச்சேர்ந்த 12 எம்.பி.க்கள் இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வரும் சர்ச்சைக்குரிய மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சலசலப்புக்கு இடையில் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில், மசோதா மீது விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சிகள் சபையின் மத்திய பகுதிக்கு வந்து, கோஷங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பிச் சென்று, அவையில் ஒழுங்கு இருந்தால் மசோதா மீது விவாதம் நடத்த அனுமதிக்க தயாராக இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதுபோல, மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வேளாண் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு, கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது கன்னியக்குறைவாக நடந்துகொண்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர், டிஎம்சி மற்றும் சிவசேனாவிலிருந்து தலா இருவர் மற்றும் சிபிஐ மற்றும் சிபிஎம்மி லிருந்து தலா ஒருவர் உள்ளனர் ஆகிய 12 உறுப்பினர்களும் நடப்பு அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
அதன்படி, இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், ( காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ). பினோய் விஸ்வம் (சிபிஐ) தோலா சென் &ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி &அனில் தேசாய், (சிவசேனா) ஆகியோர் இந்த தொடர் முழுவதும் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி,
“மாவட்ட நீதிமன்றம் முதல் சுப்ரீம் கோர்ட் வரை, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படுகிறார், அவர்களுக்காக வழக்கறிஞர்களும் வழங்கப்படுகிறார்கள், சில சமயங்களில் அவர்களின் பதிப்பை எடுக்க அரசு அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள். இங்கே எங்கள் கருத்து எடுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், நாங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து, சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் தெரியும் என்றவர், ஆண் மார்ஷல்கள் பெண் எம்.பி.க்களை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பது பதிவாகியுள்ளது. இதெல்லாம் ஒருபுறம், உங்கள் முடிவு மறுபுறம்? இது என்ன வகையான பார்லிமென்டரி நடத்தை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.