மும்பை:
மும்பை – புனே நெடுஞ்சாலையில் மீன் மழை பொழிந்தது. பொதுமக்கள் மீன்களை அள்ளி சென்றனர்.
வட மாநிலங்களில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

மீன்கள் ரோட்டில் கிடந்த காட்சி
                                            மீன்கள் ரோட்டில் கிடந்த காட்சி

மும்பையில் நேற்று பரவலாக மழை பெய்தது. மும்பை – புனே நெடுஞ்சாலை பகுதிகளில் மழையோடு மீன்களும்  பொத் பெத்தென்று தரையில் விழுந்தன. இதை நேரில் கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வண்டிகளை ஆங்காங்கே நிறுத்தி மீன்களை பொறுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக அந்த பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த மீன் மழை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெய்துள்ளதால் ஏராளமான மீன்களும் மழையோடு அந்த பகுதிகளில் விழுந்தது. ரோடு முழுவதும் ஏராளமான மீன்கள்  சிதறிக்கிடந்தன. ஒருசிலர் மீன்களை கைகளில் கிடைத்த பொருட்களில் அள்ளி சென்றனர். பலர் மொபைல் போனில் படம், வீடியோ  எடுக்க  தொடங்கினர்.
இயற்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்று. மீன்கள் எப்படி விண்ணிற்கு சென்றது? ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
கடலின் மேற்பரப்பில்  ஏற்பட்ட சூறாவளி காற்று,  புயலாக மாறி வேகமாக சுழன்று வரும்போது   கடலின்  மேற்பகுதியில் இருக்கும் மீன்கள், நண்டுகள் போன்றவை  சூறாவளியால் கவரப்படுகின்றன.
காற்றின் வேகம் குறையாமல் சுழன்று கொண்டு இருக்கும்போது, அதில் உள்ள தண்ணீரும் சுழன்று கொண்டே இருப்பதால் அதனுள் சிக்கிய மீன்களும்  மழை பொழியும் வரை உயிருடன் இருக்கும்.
சூறாவளியின் வேகம் குறைந்து மழை பொழியும்போது,  அது, மீன் மழையாக மாறுகிறது. இந்த மழை இந்தியா மட்டுமல்ல,  உலகம் முழுவதும், பல பகுதிகளில்  பெய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.