சென்னை: தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ,  “தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 08.09.2021 அன்று நடைபெற்ற 2021-22-ஆம் நிதியாண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது:

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் 1 கோடியே 75 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தோற்று விக்கப்படும்’,என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,முதற்கட்டமாக சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் கீழ்க்கண்ட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப் படும் திட்டங்களை சிறப்புக்கவனம் செலுத்தி நலத்திட்டங்களை உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் செயல்படுத்திட மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தினை தேவையான பணியாளர்களுடன் நிரந்தர அடிப்படையில் தோற்றுவித்து அரசாணை பிறப்பித்திடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

1) சென்னை

2) வேலூர்

3) விழுப்புரம்

4) திருநெல்வேலி

5) கோயம்புத்தூர்

இந்த 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.