சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைனர் பெண் ஒருவர் தகாத முறையில் கருத்தரித்தநிலையில், அந்த கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தனது 16 வயது மகள் சட்ட விரோதமாக கருவுற்று இருப்பதாகவும், எனவே அதனை கலைக்க வேண்டி அரசு மருத்துவமனையை அணுகிய தாகவும், ஆனால் 24 வாரம் கடந்து விட்டதால் கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். மேலும், கருவை கலைக்க நீதிமன்றம் உத்தர விட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுமீதான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செளந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை பெற்றுக்கொள்வது உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெண்ணின் தனிப்பட்ட உரிமை என கூறிய நீதிபதி, ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மைனராக இருந்தாலும், அவரது விருப்பத்தை கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், அரசு மருத்துவமனை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கு போக்சோ விசாரணையில் உள்ளதால் சிசுவை பத்திரப்படுத்தி வைக்க அரசு மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.