டெல்லி: லாக்டவுனில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளில் சில சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரும் பாதிப்பைச் சிறு தொழில்கள் செய்வோரும், விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களும் சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஊரடங்கு காலத்தில் சில தொழில் நடவடிக்கைகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தோட்டக்கலைப் பயிர்கள், சிறு வன விளைபொருள்கள், வங்கி சாரா சேவையில் உள்ள நிதி நிறுவனங்கள், கூட்டுறவுக் கடன் அமைப்புகள் மற்றும் கிராமப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் சில அம்சங்களுக்கு விதி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவில் சில செயல்பாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இப்போது அதில் சில விளக்கங்களை இணைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக செயலர், அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை விரிவாக்குவது தொடர்பாக சில கேள்விகள் பெறப்பட்டுள்ளன. அதை தெளிவுப்படுத்த சில விளக்கங்கள் தரப்படுகின்றன.
அதன்படி, மூத்த குடிமகன்களுடன் இருந்து அவர்களை பாதுகாப்பவர்கள், அவர்களை பராமரிப்பவர்கள்,ப்ரிபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பயன்பாடுகள், நகர்ப்புறங்களில் உள்ள உணவு பதப்படுத்தும் பிரிவுகள் ஆகியவற்றுக்கு லாக்டவுன் நடவடிக்கைகளில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டு உள்ளன என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.