தண்ணீர் ரயிலை வரவேற்க 3மணி நேரம் தாமதம்; அமைச்சர்களின் விளம்பர மோகமா? சர்ச்சை….

Must read

சென்னை:

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் ரயிலை  சுமார் 3 மணி நேரம் கழித்தே அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் , அது சுத்திகரிப்பு பணிக்காகாக நீரேற்றும் நிலையத்துக்கு அனுப்பும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

காலை 11.30 மணிக்கே தண்ணீர் ரயில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், சுமார் 3 மணி நேரம் கழித்தே, ரயிலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்ச்சி கடுமையான விமர்சங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சர்களின் விளம்பர மோகம் காரணமாகவே, ரயிலில் இருந்து தண்ணீர்  திறப்பது தாமதமானதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், சட்டசபை நடைபெற்று வந்த காரணத் தாலேயே, சபை முடிந்த பின்னர் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

சென்னையில் நிலவும் கடும் தட்டுப்பாட்டை போக்க, ஜோலார்பேட்டையில் இருந்து தினசரி ரயில் மூலம்  50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்  கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி தண்ணீர் நிரப்பப்பட்ட முதல் ரெயில் நேற்று  காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டை யில் இருந்து  புறப்பட்டு மதியம் 2 மணிக்கு பிறகே சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  காலை 11.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தது. .

ஆனால் ரயிலை வரவேற்க அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ இல்லாத நிலையில், ரயில் கொருக்குப்பேட்டை ஷெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சுமார் 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு அங்கிருந்துமதியம், 2:30 மணிக்கு, வில்லி வாக்கம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது தண்ணீர் ரயிலை  அமைச்சர் வேலுமணி,அமைச்சர் மாஃபோய் பாண்டியராஜன் மற்றும் டி ஜெயகுமார் உள்பட  அதிகாரிகள் , மலர் துாவி வரவேற்றனர். இதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையில் ஊடகத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அதை யடுத்து, ரயில் தண்ணீரை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கு, குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,  50 ரயில் வேகன்களில் 25 எம்.எல்.டி தண்ணீர் சென்னையின் வில்லிவாக்கம் ரயில்வே முற்றத்தை அடைந்துள்ளது என்றும், இது சுத்திகரிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. விளம்பர மோகத் தால், அமைச்சர்களும், அதிகாரிகளும் ரயிலை வரவேற்க தாமதப்படுத்தியதாக  குற்றம் சாட்டப் பட்டது. மேலும்,  மதியம், 2:00 மணி முதல், 3:00 மணி வரை, நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் ரயிலை வரவேற்க  மாநில அரசு விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெட்ரோ வாட்டர் அதிகாரி, நேற்று சட்டமன்றம் நடைபெற்றதால், அது முடிந்த பிறகே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வர முடிந்ததாக தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article