சென்னை
அமைச்சர் எ வ வேலு கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தில் பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார்,
“கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதைத் தவிர்க்க மாற்றுப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?”
என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,
“இந்த பிரச்சினை தொடர்பாக கொடைக்கானலுக்கு நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். கொடைக்கானல் மலையில் மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்”
என்று இதற்கு பதிலளித்துள்ளார்.