சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில்  பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன், கட்சியின் இளைஞரணி நிர்வாகியாக தேர்வு செய்யடப்பட்ட நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தவருக்கு கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் பதவி வழங்கினார் முதலமைச்சரும், அவரது தந்தையுமான  ஸ்டாலின்.

அதன்படி,  தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பணியாற்றி வருகிறார். தொடர்ந்து தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கபடி போன்ற போட்டிகளை பார்வையிட்டு வந்தார்.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம்  நாளை காலை  10.30 மணி முதல் 11 மணி வரை  நேரம் ஒதுக்கி உள்ளது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து,  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படு கிறது.