வேட்பு மனு பரிசீலனையில் பரஸ்பர புகார்கள்: நிறுத்தி வைக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மனு ஏற்பு

Must read

சென்னை: தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமங்கலம் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார், அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் ஆகியோர் வேட்பு மனுக்கள் நீண்ட பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டது.

தமிழகம் முழுதும், ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், 12ம் தேதி துவங்கி நேற்று மாலை, 3:00 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 6,620 க்கும் மேற்பட்டோர், மனு தாக்கல் செய்திருந்தனர்.

அனைத்து வேட்பு மனுக்களும், இன்று காலை, 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்பட்டன. திருமங்கலம் தொகுதியில் அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 31 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது, அதிமுக வேட்பாளர் ஆர்.பி .உதயகுமார் மனுவில் அரசு வழக்கறிஞர் முன்மொழிந்தது தவறு எனக்கூறி அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேபோல அமமுக வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதே நேரத்தில் மற்ற கட்சிகள் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஆர். பி .உதயகுமாரின் மனுவும், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் மனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இரு தரப்பு புகார்கள் மீதும் பரிசீலனை செய்யப்பட்டு இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த நபர் ஒருவர் வெளியூர் நபர் கையெழுத்திட்டதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதேபோல் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. மனுவில் குறிப்பிடப்பட்ட பெயர், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர் என இரண்டிலும் வித்தியாசம் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லை தொகுதியில் மொத்தம் 16 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மற்றவை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அமமுக வேட்பாளர் பாலகண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் ஆகியோரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article