சென்னை

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு  அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அமைச்சர்,

‘தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் சமீபத்தில் இயற்கை பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்டன. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்யமுடியாது என கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் ரூ.1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டும்தான் மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களைபோல் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. 

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது. மறைமுக வருவாய் குறித்து மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு குறைவாகதான் நிதி ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடக்கும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு 3,273 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. 

கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது.’ 

என்று தெரிவித்துள்ளார்.