கரூர்: மின் தடை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை உள்ளது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால்தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு நிலக்கரி ஒதுக்கி உள்ளதால், இனிமேல் மின்தடை ஏற்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின்தடை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பல தகவல்கள் உண்மைக்கு மாறாக இருப்பதாக வும் கூறியவர், இதுபோன்ற பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு தீரவில்லை என்று கூறியவர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்றவர், தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப். 28ம் தேதி) அதிகப்பட்ச மின் நுகர்வாக 17,380 மெகாவாட் பயன்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (ஏப்ரல் 29ம் தேதி) 17,543 மெகாவாட் என அதிகப்பட்ச நுகர்வு நடைபெற்றுள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக வும், சீரான மின் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் சனிக்கிழமைக்கு பிறகு மின் விநியோகத்தில் தடையில்லை. இனி எப்போதும் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. தற்போது தேவையை விட கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் உள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர் என்றார்.
மின் தடையால் பஞ்சாப்பில் போராட்டம் நடந்து வருகிறது. ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகாவில் மின்வெட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் 119 நாளுக்கான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அதனால், சமூக வலைதளங்களில் மின்தடை குறித்து, உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்கவேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.