சென்னை: 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகளை திறப்பது குறித்து நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக நாளை  துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும். அவரது ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினா வங்கி தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 கேள்விகள் அடங்கிய வினா வங்கியைத் தயாரிக்கும் பணியில் SCERT தீவிரமாக ஈடுபட்டுள்ளது.