கோயமுத்தூர்: கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் அமைச்சர் சேகர் பாபு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு அமைச்சரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில், அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் நடந்தே மலைமீது ஏறி சென்றது வரவேற்பை பெற்றுள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த, வனங்கள் நிறைந்த, கடினமான பாதை கொண்ட கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆணையர் .குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் உடன் மலையேறி பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தோம் என அமைச்சர் சேகர்பாபு டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டுவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் தனது மனைவியுடன் ஏழு மலைகளையும் ஏறி சாமி தரிசனம் செய்தார். மலைக்கோயில்களில் அதிக தூரம் கொண்டதாகவும், கடினமான பாதை, கடும் குளிர் காற்று புடவை கொண்ட சவால் மிக்க ஏழு மலைகளையும் அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் ஏறி சாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர், வெள்ளியங்கிரி மலை ஏறுவதில் பக்தர்களுக்க  உள்ள சிரமம், பக்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ததாக டிவிட் பதிவிட்டு உள்ளார். அமைச்சரின் நடவடிக்கையை கோவை மாவட்ட மக்கள் வரவேற்று உள்ளனர்.