சென்னை: திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம், ’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’  என திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள சர்ச்சையாகி உள்ள நிலையில், குற்றவாளியாக பேரறிவாளனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றது விமர்சனங்களை எழுப்பி உள்ளது. பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விருதுநகர்- காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவதும் அவரை ஒரு தியாகி போல அவரின் விடுதலையைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?,  அதேபோல் திமுக சொல்வதை ஏற்றுக் கொள்வது, எங்கள் வேலை இல்லை. காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வது திமுகவின் வேலை இல்லை என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸார் தங்கள் கருத்தில் தெளிவாக உள்ளனர்.  “பேரறிவாளன் விடுதலையில் திமுகவை காங்கிரஸ் விமர்சிப்பதும், திமுக காங்கிரஸை விமர்சிப்பதும் புதிதல்ல” என்று கூறியவர்,  பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை. பேரறிவாளனை விடுவிக்கும் போது நீதிமன்றம் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்தே அதிமுக மற்றும் திமுக கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் திமுகவை காங்கிரஸ் விமர்சிப்பதும், திமுக காங்கிரஸை விமர்சிப்பதும் புதிதல்ல. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம். அவ்வளவு எளிதில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரித்துவிட முடியாது. எங்கள் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.