டில்லி

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் கிடைக்கலாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   ஆயினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி தடுப்பூசி போடும் பணி நாடெங்கும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.   விரைவில் கொரொனா மூன்றாம் அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்குதல் சிறார்களுக்கு அதிக அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.  இதையொட்டி இந்திய அரசு பல வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  ஆனால் இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்து குறித்து மத்திய அரசு எவ்வித தகவலும் வெளியிடவில்லை.  மக்கள் அனைவரும் இந்த தகவலுக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் டில்லியில் நடந்துள்ளது.  அப்போது உறுப்பினர்கள் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.  இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாளவியா கலந்து கொண்டு இந்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் மன்சுக் மாளவியா தனது பதிலி, “வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது.  நாங்கள் இதற்கான பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.  எனவே குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.