விருதுநகர்:
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டிடிவி தினகரனை ஒருமையில் வசை பாடினார். டிடிவி தினகரன் மானமுள்ளவரா? என தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக சார்பில் விருதுநகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிடிவி மற்றும் அவரது கட்சியை தரக்குறைவாக விமர்சித்தார்.
ராஜேந்திர பாலஜி பேசியதாவது, டிடிவி தினகரனின் கட்சியை எப்படி நம்மால் அழைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர், அந்த கட்சியும் சரி, சின்னமும் சரி இதுவரை அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யாமல், பெயர் இல்லாமல் இருக்கும் ஒன்றை நாம் எப்படி அழைப்பது. ஏய் நாயே… ஏய் பேயே… என்றுதான் அழைக்க முடியும். கட்சிக்குப் பெயர் கூட வைக்காமல் தினகரன் கட்சி நடத்துகிறார்’ என்று சாடினார்.
மேலும், ‘தினகரன் மிகவும் மானம் உள்ளவரா. அவரை, அவரது குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ள வில்லை. தினகரனை யாரும் ஏற்க மாட்டார்கள். பின்னர் எப்படி அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்’ என்றும் கடுமையாக விமர்சித்தார்.
டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சி பலிக்கவில்லை என்று கூறியவர், முதல்வர் பழனிசாமியை விமர்சிக்க டிடிவி தினகரனுக்கு அருகதை இல்லை என்றார்.
வியாபாரத்திற்கு பிழைக்க வந்தவர்களே தினகரனுடன் உள்ளதாக விமர்சித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-திமுகவுக்கு இடையேதான் போட்டி என்று கூறினார். தமிழகத்தை ஆள்வது முதல்வர் பழனிசாமிதான் என்றும், திமுக எதிர்க்கட்சியாகவே இருக்கும் என்றும் அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.
அமைச்சரின் தரங் குறைந்த பேச்சு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.