டெல்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோதலின்போது பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கூட்டணி கட்சிகள் அவ்வப்போது, மத்தியஅரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இன்றைய கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இடம்கேட்டு, நிதிஷ்குமார் கட்ச, அதிமுக உள்பட கட்சிகள் பாஜக அரசை நச்சரித்து வகையில்,அந்த கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் சா்வானந்த சோனோவால், லோக்ஜனசக்தி கட்சியைச் சோந்த பசுபதிகுமாா் பாரஸ், பாஜகவின் பூபேந்தா் யாதவ், பாஜக எம்.பி.க்களான சுஷீல் மோடி, அஸ்வினி வைஷ்ணவ், ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ஆகியோரது பெயா்களும் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.