சென்னை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.   இதில் தட களப் போட்டிகளில் பங்கு கொள்ளத் தேர்வானவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு இது குறித்து, “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும்  ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இவ்வீரர்களில், எஸ்.ஆரோக்கிய ராஜீவ்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன்  சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள்.

ஏற்கனவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் அரசின் சிறப்பு ஊக்கத் தொகையினைக் கடந்த மாதம் 26ம் தேதியும், மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகையினை  கடந்த மாதம் 20ம் தேதி  முதல்வரால்  வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.