சென்னை: தமிழ்நாட்டில்  பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதன்படி,  அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 33 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

அதன்படி, இன்று உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்மடி,  அரசு பள்ளி  மாணவர்களக்கான சிறப்பு பிரிவு  கலந்தாய்வை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக,  அரசு பள்ளிகளில்,  6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கல்வியாண்டில் ( 2024 – 2025 ) பொறியியல் கல்லூரிகளில்  அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பித்தனர். அவா்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா்.

இதையடுத்து,.  பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில்  சிறப்பு பிரிவினர், 3,743 பேர் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். அரசு பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 387 பேர் பங்கேற்க உள்ளனர்.இவர்களில், விளையாட்டு பிரிவினர் 2,112 பேர், மாற்றுத் திறனாளிகள் 408 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,223 பேர் உள்ளனர்.

மீதமுள்ள மாணவர்களுக்கு வரும், ஜூலை 25 முதல், ஜூலை 27ஆம் தேதி வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்பின், வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பான  விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.