சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் பாலிடெக்னிக்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம், புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது உள்பட பல்வேறு தகவல்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இதனால் பயன் அடைவார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை என்று கூறியதுடன், பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும். இந்த கலந்தாய்வு, நீட் தேர்வுக்குப் பின்னரே நடத்தப்படும் என்று கூறியவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. பழைய செமஸ்டர் கட்டணமே வசூலிக்கப்படும். கட்டண உயர்வு குறித்த AICTE பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு சேருவதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும்.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பதை கூறியதுடன், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு இடமில்லை. மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பல முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
‘ஜூலை 1முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகளில் 10 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தளவாடத் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய படிப்புகளை வடிவமைத்து நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், கூட்டாட்சி தத்துவத்தில் முதல்வர் எதை பேச வேண்டுமோ அதை தெளிவாக பேசியுள்ளார். மாநிலத்திற்கு என்ன தேவை என்று குறிப்பிட வேண்டியது ஒரு முதல்வரின் கடமை, அதைத் தான் முதல்வர் செய்துள்ளார். பிரதமரிடம் தமிழகத்தின் நிலைப்பாடு, என்ன தேவை என்பதை முதல்வர் வைத்ததில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவினர் குறைகூறி வருகின்றனர். தமிழ்நாடு வளர வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.