சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
தற்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 2006 – 2011 காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 15, 2006 முதல் மார்ச் 21, 2011 வரையிலான காலத்தில், அமைச்சர் தனது பெயரிலும், அவரது மனைவி மற்றும் மகனின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடி சொத்து சேர்த்ததாக அரசு தரப்பு வழக்கு இருந்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (2) மற்றும் 13 (1) (உ) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி எம்ஆர்கே பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பன்னீர்செல்வம் உட்பட 3 பேரையும் பிப்ரவரி 3, 2016 விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அடுத்து வந்த அதிமுக ஆட்சியின்போது, லஞ்சஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி பி.வேல்முருகன் எந்த தேதியையும் குறிப்பிடாமல் தனது உத்தரவை ஒத்திவைத்தார்.