சென்னை: சென்னை உணவுத்திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என ஏக்கம் தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

3நாள் சென்னை உணவுத்திருவிழா தீவுத்திடலில்  12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் இது துவங்கியுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உணவுத் திருவிழா மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். மேலும் சுமார் 150 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மகளிர் சுயஉதவி குழுக்களின் தங்களின் சமையல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனக்கு மாட்டுக்கறி பிடிக்கும், சாப்பிடுவேன் என்று கூறியதுடன், மாட்டுக்கறி கடை இல்லை என்று ஏக்கம் தெரிவித்திருந்தார். மேலும், உணவு அரசியல் இங்கு எடுபடாது; நானும் பீஃப் சாப்பிடுபவன்தான் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை. கேட்டால் அனுமதிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

அமைச்சரின் மாட்டுக்கறி  பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பதுபோல, தேவையற்ற கருத்தை அமைச்சர் கூறியதால் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதையடுத்து, சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.அமைச்சரின் மாட்டுக்கறி ஏக்கத்தை உணவு திருவிழா அமைப்பினர் நிறைவேற்றி உள்ளனர்.