சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை நாளை தமிழ்நாடு சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் சந்திக்கிறார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதராகவும், கொரோனாவினால் உயிரிழந்த முன்களப் பணியாளர் களில் 168 பேருக்கு 74.25 கோடி ரூபாய் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
இன்று முன்களப் பணியாளராக பணியாற்றி கொரோனாவால் உயிரிழந்த 2 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் மருத்துவ தேவைகளுக்காக மத்திய அரசுக்கு கடிதம், நேரில் சந்திப்பு என பல நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. இருந்தாலும் நாளை டெல்லி சென்று மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக கோரிக்கையும் , அதேபோல் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்படுவதுடன், தமிழ்நாட்டின் நீட் தேர்வு விலக்கு அளிக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.