சென்னை

துவரை தமிழகத்தில் 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

இன்று சென்னையில் நடைபெற்ற டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்,

”கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, அனைத்துதுறை அலுவலர்கள் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பாதிப்பு ஏற்பட்டதுமே மருத்துவமனையை நாடாமல் பாதிப்பு தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைக்கு வந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் நடந்த காலரா மரணங்களை அதிமுக அரசு மறைத்தது. நோய் விவரங்களை எப்போதும் மறைக்கக்கூடாது; அப்போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு வரும். டெங்கு பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் இருந்தால் அவற்றை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

என்று கூறியுள்ளார்.