சென்னை: சென்னையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். தனக்கு உள்ள நெருக்கடிகளை மறைக்கவே உண்ணாவிரதம் நடத்துகிறார் என்று கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவதில், சபாநாயகர் அப்பாவுவின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இதை கண்டித்து, அவையில் கோஷம் எழுப்பிய இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்றிய சபாநாயகர் நேற்று ஒருநாள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்தார்.
இதை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை காவல்துறை கைது செய்த நிலையில், அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மற்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. இதில் அப்போதைய ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதை நேரிடையாக சந்திக்காமல் சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்தியதால், பேரவைத் தலைவரால் வெளியேற்றப்பட்டனர்.
அவையில், எடப்பாடி இருக்கைக்கு பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் உடன் உட்காருவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு மட்டுமே சாத்தியமானது, துணைத்தலைவர் பொறுப்பெல்லாம் அதிகாரப்பூர்வமற்றவை என்பதையெல்லாம் பேரவைத் தலைவர் எடுத்துச் சொன்னதற்குப் பிறகும்கூட அவர் சபாநாயகர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அவர் முதல்வராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாக கொடநாடு கொலை, சாத்தான்குளம் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்றவற்றை பட்டியலிடலாம். ஆனால் அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சிக்கிறார். இதன்மூலம் அவரின் செயல் தனக்கு உண்டான நெருக்கடிகளை மறைக்கவும், தனது கட்சியின் பிரச்னைகளை மூடி மறைப்பதற்கும் அவர் கையாளும் வழிமுறையாகவே கருதப்படுகிறது. அவர் வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிக்கிறார், அதற்காகவே உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]